சேப்பாக்கம் மைதானத்தில் விசில் பறிமுதல்: அரசியல் காரணமா அல்லது பாதுகாப்பு நடவடிக்கையா?

சேப்பாக்கம் மைதானத்தில் விசில் பறிமுதல்: அரசியல் காரணமா அல்லது பாதுகாப்பு நடவடிக்கையா?

2 mins read
5fb3e071-63d2-4ed7-90c3-993b7fd21c7f
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது, ரசிகர்களிடமிருந்து விசில்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.

பாதுகாப்பு சோதனையின்போது தண்ணீர் பாட்டில்கள், குடைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களுடன் ரசிகர்களிடம் இருந்த விசில்களையும் காவல்துறையினர் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

இந்நடவடிக்கை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான விசிலைக் குறிவைத்து எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், விசில் தடைக்கும் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இது காவல்துறையின் முடிவு என்றும் தெரிவித்துள்ளது.

மைதான நிர்வாகமும் இதற்கும் ஐசிசி அல்லது பிசிசிஐ அமைப்புகளுக்கும் சம்பந்தமில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

மைதானத்தைச் சுற்றியுள்ள கடைகளில் விசில் விற்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாயின.

இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காவல்துறையினர், மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்லவோ அல்லது விற்பனை செய்யவோ எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவுவது தவறான தகவல் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், கட்சியின் சின்னமான விசிலின் சத்தத்தைக் கேட்டாலே ஆளும் அரசு அச்சப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் ரசிகர்களிடம் விசில் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்