தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை (மே 10) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு சிறப்பித்தார். ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும் ஆதரவாளர்களும் பங்கேற்ற பதவியேற்பு விழாவைச் சென்னையில் 20 இடங்களில் பெரிய திரை அமைத்துப் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஜய் பதவியேற்ற பின்னர் அவருடன் கைகுலுக்கி ஆதரவு தெரிவித்தார் ராகுல் காந்தி.
முதலில் ஒலித்த ‘வந்தே மாதரம்’
‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதையடுத்து அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்து ஒலிக்கு மத்தியில் பதவியேற்றார் விஜய்.
‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.
பதவியேற்பு நிகழ்வில் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை திரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முதல்வர் விஜய் கையெழுத்திட்ட முதல் கோப்பு
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் மூன்று முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு, அவை தொடர்பான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய்.
தொடர்புடைய செய்திகள்
தமிழகம் முழுவதும் வீட்டு மின் நுகர்வோர்க்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற உத்தரவுக்கான கோப்பில் அவரது முதல் கையெழுத்து இடம்பெற்றது.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ‘சிங்கப்பெண்’ அதிரடிச் சிறப்புப் படையை அமைப்பதற்கான உத்தரவில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில், போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து மாநகர, மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடை அலகுகள் அமைக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார்.
பதவியேற்ற பின்னர் தனது அமைச்சரவையில் உள்ள ஒன்பது அமைச்சர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்குச் சென்றார் விஜய்.
ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்பு
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவையில் அவருடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகிய ஒன்பது பேர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.
அடுத்த சில நாள்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் தனது வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.
“விஜய்யின் பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். தமிழக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும். இது மத்திய-மாநில உறவுகளில் ஒரு சுமுகமான தொடக்கத்தைக் குறிக்கிறது,” என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் முதல்வராக நடிகர் விஜய், ஏழை எளியோருக்கான நலத்திட்டங்களையும் அனைவருக்கும் சமமான நீதியையும் வழங்கி, உங்கள் மாநிலத்தை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள் எனத் தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழக முதல்வர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தாம் ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கை அதிபர் அனுர குமர திசநாயக்க கூறியுள்ளார்.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையேயான கலாசார, வரலாற்றுப் பிணைப்புகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே நிலவும் ஆழமான உறவின் அடிப்படையில், பொருளியல் முன்னேற்றம், வட்டாரச் செழுமை தொடர்பாக முதல்வர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அதிபர் ஆர்வம் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “எங்க வீட்டுப் பையன் தம்பி விஜய்க்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“விஜய்க்கும் அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள். திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

