விஜய்க்கு விசில், கமலுக்கு டார்ச் லைட் சின்னங்கள் ஒதுக்கீடு

1 mins read
6cfd399b-908a-4fed-bbdf-a47a070dde7d
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னமும் தவெகவுக்கு விசில் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னமும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் தவெக சார்பாக தனிச்சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதைப் பரிசீலித்த ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

எனினும், தவெக இன்னும் அங்கீகாரம் பெறாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால் இந்தச் சின்னத்தை 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

தவெக சார்பாக விண்ணப்பப் படிவத்தில் 10 சின்னங்களைப் பரிந்துரைத்திருந்ததாகவும் அவற்றுள் ‘விசில்’ சின்னத்தை முதலாவதாக குறிப்பிட்டு இருந்ததாகவும் தவெக சமூக ஊடகப்பிரிவு துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இது விஜய்க்குப் பிடித்தமான சின்னம் என்றும் தவெக தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியான தருணம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் முதன்முதலாக களமிறங்கியபோது டார்ச் லைட் சின்னம்தான் ஒதுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்