தமிழகத்தில் நீர்ப்பாசனத்துறை முடங்கிக்கிடப்பதாக விவசாய சங்கங்கள் புகார்

1 mins read
7e172482-3539-4033-a65e-28f16aaba17d
பி.ஆர்.பாண்டியன். - படம்: ஊடகம்

மதுரை: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் நீர்ப்பாசனத்துறை முடங்கிக்கிடப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சாடியுள்ளது.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் திமுக அரசு காவேரி குண்டாரு இணைப்பு திட்டத்தையும் முடக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டால் எதிர்வரும் 2026 தேர்தலில் திமுகவை எதிர்த்து களமிறங்க நேரிடும் என பி.ஆர்.பாண்டியன் எச்சரித்தார்.

மத்திய அரசின் நீர்வளத்துறை, முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் அமைத்த ஆய்வுக்குழுவுக்கு எதிராக மத்திய அரசு புதிய குழுவை அறிவித்துள்ளது.

இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை ஆய்வை தமிழக பொறியாளர்கள் புறக்கணித்ததை வரவேற்கிறோம் என்றார் பாண்டியன்.

முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க, கேரள அரசு முட்டுக்கட்டை போடுவதாகச் சாடிய அவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் கேரள அரசை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்த விவரங்கள் தொடர்பில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் பி.ஆர்.பாண்டியன்.

திமுக அரசு விவசாயிகளுக்கு ஆதரவளிக்காமல் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்றார் பி.ஆர்.பாண்டியன்.

குறிப்புச் சொற்கள்