சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு யார் கொடுத்தது? காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணாமலை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
“இதுகுறித்து, மாணவியின் தந்தை சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
“மாணவியின் உறவினர் ஒருவரது முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
“பாலியல் வன்கொடுமை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கெனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை எப்படி இதுபோல் எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?
“நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதலமைச்சர் திரு ஸ்டாலின், ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்?
“தன் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை அவர் எந்த வகையில் கையாண்டுக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, முதலமைச்சர் திரு ஸ்டாலின் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்,” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் 21 வயது மனநலம் குன்றிய கல்லூரி மாணவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னை கல்லூரி வாசலில் இருந்து சிலர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவலர்கள் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.