புதுடெல்லி: அடுத்த தமிழக முதல்வர் யார் என்பது குறித்து ‘சி வோட்டர் நிறுவனம்’ இந்தியா டுடே நிறுவனத்துடன் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 27 விழுக்காட்டினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
புதிதாக கட்சி தொடங்கி முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் 2026ல் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 18 விழுக்காட்டினர் கூறினர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தப் பட்டியலில் மூன்றாவது இடமே கிடைத்துள்ளது.
அவர் அடுத்த முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 10 விழுக்காடு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல, தமிழ்நாட்டில் தாமரையை மலரவைக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக 9 விழுக்காட்டினர் கருத்து கூறினர்.
கட்சி தொடங்கி ஓராண்டு காலமே ஆகி உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு, கருத்துக்கணிப்பில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ளது.