சென்னை: தமிழகத்துக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அரசு முகமையான ’கைடன்ஸ் டிஎன்’ அமைப்பில் இருந்து 15 பணியாளர்கள் திடீரென நீக்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு உடனடியாக வெளிப்படையான விளக்கமளிக்க வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்த நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை, ’கைடன்ஸ் டிஎன்’ அமைப்பில் பணியாற்றிய ஊழியர்கள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சட்டவிரோதமாகக் கசியவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் தற்போது ஆந்திர அரசின் தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்கும் பணியில் இணைந்திருப்பது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகத் திரு அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
மறுபுறம், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தமிழகத்தில் பணியாற்ற உகந்த சூழல் இல்லாததால், தாங்களாகவே பதவி விலகியதாக அந்த ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பணிச்சூழல் மோசமடைந்தது குறித்துத் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் தமிழகத்தில் முதலீடு செய்யவிருந்த மூன்று தென்கொரிய நிறுவனங்களின் ரூ.1,614 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றதையும் என்ஃபீல்டு, ஹையர் போன்ற நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளதையும் திரு அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
தகவல் கசிவு உண்மையென்றால், அது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் உண்மை நிலையைத் தமிழக மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
