தென்காசி: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கஞ்சா போதைப்பொருளைக் கட்டுப்படுத்த தமிழக அரசால் இயலாதது ஏன் என்று ஆளுர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் அமைப்பு சார்பில் போதை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் போதைப் புழக்கத்தால் மிகவும் பாதிப்படைந்த மாநிலமாக மாறி வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் போதைப்பொருள்கள் தொடர்பான புகார்களை என்னிடம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் கஞ்சாப் புழக்கம் அதிகரித்திருக்கிறது.
தற்போது போதைப்பொருள்கள் நிறைய வடிவங்களில் சந்தையில் ஊடுருவியுள்ளன. ஓபிஎம், ஹெராயின், ஹசீஸ், மெத்தபெட்டமின், மெத் போன்ற ரசாயன வடிவங்களிலும் செயற்கையாகவும் போதைப்பொருள்கள் புழக்கத்தில் உள்ளன.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பள்ளி-கல்லூரி மாணவர்கள்தான்.
இளைஞர்களின் போதைப்பழக்கம் தனிப்பட்ட முறையில் அவர்களின் எதிர்காலத்தை மட்டும் பாதிப்பதில்லை. அந்த இளைஞரை நம்பிய குடும்பத்தின் வளர்ச்சியையும், பெற்றோர்களின் கனவையும், கல்வியையும் சீர்குலைக்கக் கூடியது.
மத்திய புலனாய்வு அமைப்புகள் வெவ்வேறு வகையான போதைப் பொருள்களை பறிமுதல் செய்வதுபோல தமிழ்நாடு அரசு ஏன் கஞ்சாவை பறிமுதல் செய்ய முடிவதில்லை.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாட்டில் போதைப்பொருளுக்கான தேவையை உருவாக்க அந்தக் கும்பல்கள் ஒன்றுசேர்ந்து முயன்று வருகின்றன. அதனைத் தடுக்க வேண்டும்.
அனைத்துலகக் கடத்தல் கும்பல்கள், போதைப்பொருள்களை விநியோகம் செய்வதன் மூலம் பில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தல்கள் பாகிஸ்தான், தமிழ்நாடு, துபாய் வழியாகத்தான் அதிக அளவில் நடைபெறுகிறது என மத்திய புலனாய்வு அமைப்புகள் ஆய்வில் உறுதிசெய்துள்ளன.
அனைத்துலகச் சந்தைகளுக்கு இலங்கை, இந்திய எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தல் நடைபெறும் வேளையில் இந்தியாவிற்குள்ளும் போதைப்பொருள் புழக்கத்திற்காக சட்டவிரோதமாக கடத்திக் கொண்டுவரப்படுகிறது.
பஞ்சாப்பில் போதைப்புழக்கம் அங்குள்ள இளையர்களின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டது. அதனால், ராணுவத்தில் சேருவதற்கான உடல்தகுதியை அவர்கள் இழந்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது.
அரசாங்கத்தால் மட்டுமே போதைப்பொருளை ஒழித்துவிட முடியாது. அனைவரின் கூட்டுமுயற்சியால் அது சாத்தியப்படும்,” என்று ஆளுநர் ரவி தமது உரையில் குறிப்பிட்டார்.
ஆளுநர் சொல்வது பச்சைப்பொய்: அமைச்சர் ரகுபதி
ஆளுநர் ரவி பேசியதற்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
“போதை பொருள்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் 2022ஆம் ஆண்டு 10,665 வழக்குகள் போடப்பட்டன. 19 வெளிநாட்டினர் உட்பட 14,934 பேர் கைது செய்யப்பட்டனர். 28,383 கிலோ கஞ்சா, 63,848 மாத்திரைகள், 98 கிலோ இதர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
“இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், பாஜக மேடையில் நிற்பவராக தன்னை மாற்றிக் கொண்டு பச்சைப் பொய்களை ஒரு ஆளுநர் பேசுவது வெட்கக் கேடானது.
“தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 16 குற்றவாளிகளை கட்சியில் இணைத்துள்ளது பாஜக. இந்தியா முழுவதும்கூட பாஜக நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள்.
“அவர்களைப் பற்றி எல்லாம் ஆளுநர் ஏன் பேச மறுக்கிறார்? போதைப் பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றியெல்லாம் ஏன் வாய் திறப்பதில்லை?,” என்று ரகுபதி கூறியுள்ளார்.


