கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் காட்டு யானைகள்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் காட்டு யானைகள்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

2 mins read
c0318250-76a7-48b8-ae2b-04e086a9e05d
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அங்கு செல்வதற்கு, தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏபிபிலைஃவ் டாட் காம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி அமைந்து உள்ளது. இது வனத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது.

கொடைக்கானலில் பேரிஜம் ஏரிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, அந்தப் பகுதிகளுக்குச் செல்ல திங்கட்கிழமை (மார்ச் 23) முதல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல முடியும்.

பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 22) பிற்பகல் முதல் பேரிஜம் ஏரி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு திங்கட்கிழமை (இன்று) காலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை வனத்துறை தடை விதித்துள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானை இடம் பெயர்ந்து காட்டுக்குள் சென்றதும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்,” என்றனர்.

பேரிஜம் ஏரி, மோயர்முனைப் பகுதியிலிருந்து 18 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 24 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பேரிஜம் ஏரியின் தண்ணீர், தேனி மாவட்டம், பெரியகுளம் மக்களின் குடிநீராகப் பயன்படுகிறது. பேரிஜம் ஏரி, ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியில் 2ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்