சென்னை: மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புவதாக நடிகை குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, குஷ்பு இதனை அறிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, “மகளிர் ஆணைய உறுப்பினர் என்பது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. அப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டதால் இப்போது என்னால் சுதந்திரமாகச் செயல்பட முடியும். இதனைத் தொடர்ந்து மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதால் திமுகவிற்குப் பயம் வந்துள்ளது. அந்த பயம் இருக்கணும். அவர்கள் கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகிறார்கள். அது விரைவில் உடைந்துவிடும்,” என்று குஷ்பு கூறியுள்ளார்.
மேலும், பிரதமரின் தொலைநோக்குத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான தனது பயணத்தில் இனி வதந்தி பரப்புவோர் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகளிா் ஆணைய உறுப்பினா் பதவியிலிருந்து விலகுவதாக ஜூன் 28ஆம் தேதி அளித்த கடிதமும் ஜூலை 30ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கடிதமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இதனை மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மாவும் உறுதிசெய்தார்.

