தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றிக் கூட்டணி அமையும்: பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் உறுதி

2 mins read
c5145414-7702-49d1-844b-9afb3007cf93
மகள் காந்திமதியுடன் ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: தனது தலைமையில் பாமக நல்ல கூட்டணி, வெற்றிக் கூட்டணியை அமைத்து வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவில் உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. ராமதாஸ், அவரது மகன் அன்புமணிக்கு இடையே கட்சித் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

அண்மையில் தனது தலைமையில் பாமக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்தார் அன்புமணி. இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலும் ஆகஸ்ட் 17ஆம் தேதி போட்டிப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் பாட்டனூரில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், திரளான தொண்டர்களைக் காண முடிந்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள் ஆகியோர் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வழக்கமாக, ராமதாஸ் அருகே உள்ள இருக்கையில் அன்புமணி அமர்ந்திருப்பார். ஆனால், இம்முறை ராமதாசின் மூத்த மகள் காந்திமதி அமர்ந்திருந்தார்.

பாமக தலைவராக ராமதாஸ் நீடிப்பார் எனப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்புமணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்த 16 குற்றச்சாட்டுகளை ஜி.கே.மணி வாசித்தார். கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து உரையாற்றிய ராமதாஸ், தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் பாமக போராடியதாகவும் சாதி வித்தியாசம் இன்றி அனைத்து மக்களுக்காகவும் தாம் பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

“மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தட்டிக்கழிக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும் வரை போராடாமல் ஓயப்போவது இல்லை. முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு உடனடியாக 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை தந்துவிட முடியும். அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தபோது 10.5% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது,” என்றார் ராமதாஸ்.

தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்கான முழு அதிகாரமும் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொண்டர்கள் எதிர்பார்க்கும் இயற்கையான, வெற்றிக் கூட்டணி நிச்சயம் அமையும் என்றார்.

அன்புமணி மீது கூட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தனது உரையின்போது, மகன் பெயரை அவர் ஒருமுறைகூட உச்சரிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்