அரசியலில் வேகத்தைவிட விவேகம்தான் முக்கியம்:விஜய்

அரசியலில் வேகத்தைவிட விவேகம்தான் முக்கியம்:விஜய்

2 mins read
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கானப் பந்தல் நடும் விழா அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்றது
e73ca362-e85d-4377-965c-30c0e09ab910
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பந்தல் நடும் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ளவில்லை. - படம்: தமிழக ஊடகம்

விழுப்புரம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநாடு இம்மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்குச் செப்டம்பர் 25ஆம் தேதி இரவு காவல் துறை 17 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.

அக்கட்சித் தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் சென்னை மாநாட்டுப் பந்தல் அமைப்பாளரான ஆனந்தன் மாநாட்டிற்கான பந்தல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) காலை 4.50 மணிக்கு நட்டார். அதைத்தொடர்ந்து தவெக மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்காகத் தமிழகம் முழுவதுமிருந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அந்தந்தமாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களிலிருந்து தீர்த்தங்கள் பந்தல் கால் நடும்போது தெளிப்பதற்காக அக்கட்சியினரால் கொண்டுவரப்பட்டது.

ஆனால், பந்தல் நடும் விழாவில் தவெக கட்சித் தலைவர் விஜய் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாநாடு தொடர்பாகத் தனது தொண்டர்களுக்கு விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக மக்களுக்காக நாம் உழைக்கவேண்டும். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்யவேண்டும். அதை, அரசியல் ரீதியாக சட்டபூர்வமாக, உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான், என்நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் லட்சியம்,” எனக் கூறியுள்ளார்.

மேலும், “மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், எச்சரிக்கையுடன் களமாடுவது மிகவும் அவசியம். வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்