தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விதைக்காமலேயே நெல் விளைச்சல்; விவசாயிக்கு இன்ப அதிர்ச்சி

1 mins read
பைசா செலவின்றி 16 மூட்டை நெல்!
5ac30c4a-a614-4dbe-acf1-bfccc2926834
நடவு செய்யாமலேயே வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுக்கும் பணி இடம்பெறுகிறது. - படம்: மாலைமலர்

பட்டுக்கோட்டை: நாற்றங்கால் போட்டு, பின் நடவு நட்டு, களையெடுத்து, உரமிட்டபோதெல்லாம் விளைச்சல் தராத வயல், ஒன்றுமே செய்யாதபோது 16 மூட்டை நெல்லை வாரி வழங்கியுள்ளது.

இதனால், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஆம்பலாப்பட்டு எனும் ஊரைச் சேர்ந்த ஜெயராஜ், 52, என்ற விவசாயி இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

ஆறு மாதங்களுக்குமுன் தமக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டார் ஜெயராஜ். அப்போது ரூ.50,000 செலவிட்டபோதும், போதுமான விளைச்சல் இல்லாததால், போட்ட முதலே அவருக்குக் கிடைக்கவில்லை.

இதனால், இம்முறை அவர் நெல் சாகுபடி செய்யாமல் தமது நிலத்தைத் தரிசாக விட்டுவிட்டார். நிலம் இருக்கும் திசையிலும் அவர் தலைகாட்டவில்லை.

இந்நிலையில், சில நாள்களுக்குமுன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், “கதிர் முற்றி நெற்பயிர்கள் தலைசாய்ந்த பின்னரும் இன்னும் ஏன் கதிர் அறுக்கவில்லை,” என்று ஜெயராஜிடம் கேட்டுள்ளனனர்.

அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், தமது வயலுக்குச் சென்று பார்த்தபோதுதான் அவர்கள் சொன்னது உண்மை என்பதை அறிந்தார்.

அதன்பின் கதிரறுக்க, அவருக்கு 16 மூட்டை நெல் கிடைத்ததாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவித்தது.

இதுபற்றிக் கருத்துரைத்த திரு ஜெயராஜ், “கடந்த முறை கதிரறுத்தபின் வயலைச் சுத்தம் செய்யவில்லை. அதனால், அடி அறுப்புத் தாளிலிருந்து பயிர் வளர்ந்து, அதன்மூலம் நெல் விளைந்தது என்னைப் போன்ற விவசாயிகளுக்கு வியப்பளித்துள்ளது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்