கடலூரில் பெண் ஒருவர், அவருடைய 4 மாதக் குழந்தை, எட்டு வயது தங்கை மகன் ஆகியோர்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மூவரும் மாண்டனர். குடும்பத் தகராறை தொடர்ந்து, மாண்ட பெண்ணின் தங்கையின் கணவர் அவர்களை தீ வைத்தார். சம்பவத்தில் கடும் காயமடைந்த இருவர் உயிருக்குப் போராடிவருகின்றனர்.
மாண்டவர்கள் 27 வயது தமிழரசி, அவருடைய நான்கு மாதப் பெண் குழந்தை ஹாசினி, 8 வயதான தங்கை மகன் ரக்ஷ்ன் ஆகியோர். காயமடைந்தவர்கள் தமிழரசியின் தங்கை தனலட்சுமி, 25, அவருடைய தாயார் செல்வி, 50, தனலட்சுமியின் கணவர் சற்குரு ஆகியோர்.
தனலட்சுமிக்கும் சற்குருவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக்கொண்டு தனலட்சுமி தமது தாயாருடன் தமிழரசியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதை அறிந்துகொண்ட சற்குரு தனலட்சுமியைத் தேடிக்கொண்டு தமிழரசியின் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சற்குரு அங்கு இருந்தவர்கள்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவிக்கு ஓடி வந்தனர். தமிழரசியும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தனலட்சுமியும், செல்வியும் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

