திருச்சி: மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பக்தர் பலியான சம்பவம் சமயபுரம் கோவிலில் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் கோவிலில் கடந்த நான்கு வாரங்களாக சிறப்புப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) காலை பூச்சொரிதல் விழா சிறப்பாக நடந்தேறியது. இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து குவிந்திருந்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் சனிக்கிழமை இரவு கோவில் நுழைவாயில் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கோவில் மண்டபத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த நதியா (32) உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதில் கோவில் மண்டபத்திலேயே நதியா மாண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மற்ற இருவரையும் பக்தர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து சமயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், கோவிலின் கிழக்கு வாசல் நுழைவாயில் மண்டபப் பகுதி மூடப்பட்டது.

