கோவையைச் சேர்ந்த இரு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குத் தாயாக விளங்கி வருகிறார்.
கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை இவர் தானம் செய்து சாதனை புரிந்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பி.என்.புதூரைச் சேர்ந்தவரான ஸ்ரீவித்யா, 27, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் மூலம் மறுவாழ்வு கிடைக்க உதவி வருகிறார்.
இதுகுறித்து ஸ்ரீவித்யா கூறு கையில், "பிறந்த குழந்தைகளின் ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. இதன்மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.
"எனவே, என் கணவர் பைரவ் வின் ஆதரவுடன், தாய்ப்பால் கிடைக்காத பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை தானம் செய்யத் தொடங்கினேன்.
"எங்களுக்கு அசிந்த்யா என்ற 4 வயது மகனும் ப்ரக்ருதி என்ற பத்து மாத மகளும் உள்ளனர்.
"திருப்பூரைச் சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்தி வரும் அமிர்தம் அறக்கட்டளை மூலம், தாய்ப்பால் தானத்தை சமூகச் சேவை அடிப்படையில் அளித்து வருகிறேன்.
"என் மகள் பிறந்த 5வது நாள் முதல் தானம் வழங்கி வருகிறேன். ஏழு மாத காலத்தில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி னேன். இப்போது பத்து மாதமாகி உள்ள நிலையில், 135 லிட்டருக்கு மேல் தானம் செய்துள்ளேன்.
"தினமும் குழந்தைக்கு அளித்ததுபோக, மீதமுள்ள தாய்ப்பாலை அதற்கென பிரத்தியேகமாக உள்ள பாக்கெட்டில் சேகரித்து, குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிடுவோம். குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனைக்கு அவற்றைப் பெற்றுச் செல்வர்.
"இப்படி தானம் செய்வதால் உடல்நலம் பாதிக்கப்படும், கண்பட்டுவிடும், நம் குழந்தைக்குப் பற்றாமல் போய்விடும் என்றெல்லாம் சில பெரியவர்கள் சொல்வர். அப்படி எதுவும் இல்லை," என்கிறார் ஸ்ரீவித்யா.
அதிக அளவிலான தாய்மார்கள் இதில் அக்கறை காட்டும்படி யும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவரது சாதனைக்குத் தன் கணவரும் குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளதாகவும் ஸ்ரீவித்யா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

