தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை விமானத்தில் பெண் பயணிக்குப் பாலியல் தொல்லை; ஆடவர் கைது

1 mins read
56b46327-becb-48b7-986b-5af8e1b99b8e
டெல்லியிலிருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானத்தில் பாலியல் அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்தது. - மாதிரிப்படம்: ஊடகம்

சென்னை: விமானப் பயணத்தின்போது பெண் பயணியிடம் அத்துமீறியதாகக் கூறி, ஆடவர் ஒருவரைச் சென்னைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

ராஜேஷ் சர்மா என்ற அந்த ஆடவர் தமக்குப் பின்னால் அமர்ந்திருந்ததாகவும் தாம் உறக்கத்தில் இருந்தபோது அவர் தம்மைத் தகாத இடங்களில் தொட்டதாகவும் அப்பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த புதன்கிழமை (அக்டோபர் 9) டெல்லியிலிருந்து சென்னை சென்ற விமானத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அந்தப் பெண் பயணி சன்னலோரமாக அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் இருந்த இருக்கையில் ராஜேஷ் அமர்ந்திருந்தார்.

“பயணத்தின்போது தாம் உறங்கிவிட்டதாகவும் அப்போது ராஜேஷ் சர்மா தம்மிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் அப்பெண் புகாரளித்துள்ளார்,” என்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மகளிர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“மாலை 4.30 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறங்கியதும், அப்பெண் விமான நிலையப் பணியாளர்களை அணுகி, விவரத்தைக் கூறினார். அதனையடுத்து, காவல்துறையிடம் அப்பெண் புகாரளிக்க அப்பணியாளர்கள் உதவினர். அப்புகாரின் அடிப்படையில், ராஜேஷ் சர்மா கைதுசெய்யப்பட்டு, அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது,” என்றும் அந்த அதிகாரி விளக்கினார்.

கைதான ஆடவர், ராஜேஷ் சர்மா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் ஆயினும் வெகுகாலமாகவே அவர் சென்னையில் வசித்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் உடனடியாக எதுவும் கருத்துரைக்கவில்லை என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஊடகம் வெளியிட்ட செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்