சென்னை: தங்கக் காசு மோசடி தொடர்பான வழக்கில் சென்னைக் காவல்துறையைச் சேர்ந்த பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறைந்த விலையில் தங்கக் காசு வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் ரூ.20 கோடி பணம் வசூலித்து ஏமாற்றியதாக ஷீலா மேரி என்ற அந்த ஆய்வாளர் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஷீலா மேரி, திருவெற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட வடசென்னைப் பகுதிகளில் நீண்டகாலம் பணியாற்றியவர்.
இந்நிலையில், குறைந்த விலைக்குத் தங்கக் காசுகள் வாங்கித் தருவதாக அவர் கூறியதை நம்பி, பொதுமக்கள், உடன்பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகள், அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் பணம் கொடுத்துள்ளனர். இவர்களிடமிருந்து ஆய்வாளர் ஷீலா மேரி ரூ.20 கோடி வரை வசூலித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஷீலா மேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் தனியார் நிறுவனம் நடத்தி வந்த பிரபுமணி என்பவர் குறைந்த விலைக்குத் தங்கக் காசுகள் வாங்கி அவற்றை ஆய்வாளர் ஷீலா மேரி மூலமாகப் பலரிடம் விற்று வந்துள்ளார். இதில் இருவருக்கும் கணிசமான வருமானம் கிடைத்துள்ளது.
ஷீலா மேரியை நம்பி நூற்றுக்கணக்கானோர் ஒவ்வொரு மாதமும் ரூபாய் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். உடன் பணியாற்றிய அதிகாரிகள், துணை ஆணையர் ஒருவரும்கூடப் பணம் வசூலித்து ஷீலா மேரியிடம் கொடுத்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், தங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட மொத்த நகை வியாபாரி ஒருவர், தங்கக் காசுகளைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக ஷீலா மேரியும் பிரபு மணியும் தங்கள் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரது முன்பிணை மனுவும் நீதிமன்றத்தில் தள்ளுபடியானதை அடுத்துக் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

