கும்பகோணம்: சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பாபநாசத்தைச் சேர்ந்த 51 வயது மும்தாஜ் பேகம், அண்மையில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்தவர் மும்தாஜ் பேகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்.
தமது சொந்த ஊரான பண்டாரவாடை கிராமத்துக்கு கடந்த மாதம் சென்ற அவர், சனிக்கிழமை (மே 16) சிங்கப்பூருக்குச் செல்ல திருச்சி விமான நிலையத்துக்குச் சென்றார்.
அங்கு, விமான நிலைய அதிகாரிகள் அவரது ஆள்காட்டி விரலில் வாக்களித்தற்கு அடையாளமாக இடப்படும் அழியா மையைப் பார்த்துள்ளனர். தொடர்ந்து அவரது கடவுச்சீட்டைச் சரிபார்த்து விசாரணை நடத்தினர்.
அவர் சிங்கப்பூர்க் குடியுரிமையை மறைத்து, தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்தது தெரிய வந்தது.
இந்தியச் சட்டப்படி இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதற்கு அனுமதியில்லாத நிலையில், வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர் அங்கு வாக்களிப்பது குற்றமாகும்.
இதையடுத்து திருச்சி விமான நிலைய அதிகாரி முகேஷ்ராம் கௌதம் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், மும்தாஜ் பேகம் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள், தங்களது தொகுதிகளில் வாக்களித்தது தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் பலர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் நாடு திரும்ப விமான நிலையம் வரும்போது, வாக்களித்த அடையாளத்தைக் கண்டறிய அவர்களது கைவிரல்களைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
வாக்களித்த அடையாள மை இருந்தவர்கள், வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற பயணியாக இருந்தால், அவர்களைப் பயணிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும், காவல் நிலையங்களில் ஒப்படைக்கும்படியும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமை பெற்ற கிட்டத்தட்ட 25 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை (மே 14) உறுதிப்படுத்தின.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய இந்த நடவடிக்கை இன்னும் தொடர்ந்து வருகிறது.

