தடை செய்யப்பட்ட ஆமைகளை பேங்காக்கில் இருந்து கடத்தி வந்த பெண்கள் கைது

1 mins read
8ebb3695-3598-40e2-9606-cd4e229f30b9
பெண்களால் கடத்தி வரப்பட்ட ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். - படம்: தமிழக ஊடகம்

மதுரை: தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் இருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் தடை செய்யப்பட்ட ஆமைகளைக் கடத்தி வந்த இரண்டு பெண்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து மதுரைக்கு வியாழக்கிழமை அன்று (ஜனவரி 30) ஸ்ரீலங்கன் பயணிகள் விமானம் வந்தது.

அதில் வந்த பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தபோது, தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை இரண்டு பெண்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாங்கள் புதுக்கோட்டை, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த சாவித்திரி, உஷா என்று தெரிவித்தனர்.

அத்துடன், தாங்கள் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து ஆமைகளைக் கடத்தி வந்ததாகவும் கூறினர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பெண்கள் இருவரையும் கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குறிப்புச் சொற்கள்