சென்னை: தமிழகத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் பெண்கள் பலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது போன்று வெளியான காணொளி உண்மையானதல்ல என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
“இக்காணொளியில் காணப்படுவது முற்றிலும் பொய்யான தகவல். இந்தக் காணொளி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல,” என்று தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடகத் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் தேதியன்று தெலுங்கானாவைச் சேர்ந்த சமூக ஊடகப் பக்கங்களில் இந்தக் காணொளி பதிவிடப்பட்டது என்றும் காணொளியில் காணப்படும் தெலுங்கு எழுத்துகளை மறைத்து தமிழ்நாட்டில் அந்தச் சம்பவம் நடந்தது போன்று சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மது விற்பனையில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில் அண்மைய காணொளி புது விவாதங்களை எழுப்பி உள்ளது.

