சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஆளும் திமுக அரசாங்கத்தின் ‘விடியல் பயணம்’ திட்டத்தின்கீழ் மார்ச் மாதம் அன்றாடம் 55 லட்சம் பெண்கள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்தனர். ஒப்புநோக்க, கடந்த ஆண்டின் இதே மாதம் இந்த எண்ணிக்கை 49 லட்சமாக இருந்தது.
மே 9ஆம் தேதி வரை, இந்தத் திட்டத்தின்கீழ் பெண்கள் ஒட்டுமொத்தமாக 468 கோடிப் பயணங்கள் செய்துள்ளனர். கடந்த நிதியாண்டில் புதிய உச்சமாக நாள் ஒன்றுக்கு 176 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்ததாக மாநிலப் போக்குவரத்துக் கழகங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, குறைந்த வருமானப் பிரிவுகளில் உள்ள பெண்களுக்கு விடியல் பயணம் திட்டம் உதவியுள்ளதாக மாநிலத் திட்டமிடுதல் ஆணையத்தின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.