நெல்லை: நெல்லை மாநகராட்சி குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குப்பைகள் நிறைந்த கூடைகளோடு பெண்களை அழைத்துவந்த கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் டவுனில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலையில் நடந்தது.
கூட்டத்திற்கு 7வது வார்டு கவுன்சிலரான இந்திரா மணி, தனது வார்டுக்கு உட்பட்ட பாளை எம்கேபி நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் நிறைந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் அதற்காக வார்டில் உள்ள பெண்களைக் குப்பைகள் நிறைந்த கூடையோடு அழைத்து வந்திருந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து குவிந்துக் கிடக்கும் அனைத்து குப்பைகளையும் உடனடியாக அகற்றிட மேயர் ராமகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

