சென்னை: கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவில் ஏற்பட்ட ஜிப்லைன் பழுது காரணமாக, ரோப் காரில் பயணித்துக் கொண்டிருந்த 2 பெண்கள் அந்தரத்தில் தொங்கியவாறு அலறி கூச்சலிட்டனர்.
சென்னை கதீட்ரல் சாலையில் 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத் தரத்துடன் நவீன அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா ரூ.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் பட்டது.
இதில் மக்களைக் கவரும் வகையில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், இசை நீரூற்று, 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன் ரோப் கார், கலைக்கூடம், கண்ணாடி மாளிகை போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான மக்கள் பூங்காவுக்கு வருகை தந்திருந்தனர். அப்போது அங்குள்ள பிரபல ஜிப்லைன் ரோப் காரில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஜிப்லைனில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு ரோப் கார் பழுதடைந்து பாதி வழியில் நின்றது. இதனால் அதில் பயணித்துக் கொண்டிருந்த பெண்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டனர்.
தொடர்ந்து அந்தரத்தில் 20 நிமிடங்களுக்கு மேலாக தொங்கியவர்கள் அழவும் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே நீண்டநேரமாக ஜிப்லைனை இயங்க வைக்க முயன்றுகொண்டிருந்த ஊழியர்கள், அது முடியாததால் பின்னர் கயிறு மூலமாக ரோப் காரை கட்டி இழுத்து பெண்களை மீட்டனர். தொடர்ந்து ரோப் காரில் எதனால் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “அரசு பூங்கா புதிதாக திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு பாதுகாப்பற்ற உபகரணங்களைக் கொண்டு திமுக அரசு விளையாடுவது கண்டனத்துக்குரியது.
தொடர்புடைய செய்திகள்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவுக்கு நுழையவே ரூ.100 கட்ட வேண்டும். இதுதவிர ஒவ்வொரு வசதிக்கும் தனி கட்டணம்.
இவ்வாறு தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் திமுக, பூங்காவுக்கு வருகை தரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப்லைன் பழுது என்று தவறான தகவல் பரப்புவதா? என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், “ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை மீட்டு பூங்காவை உருவாக்கினால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வருகிறது? ஜிப்லைன் பூங்காவின் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. ஜிப்லைனில் பழுதடைவதற்கு ஒன்றுமில்லை, ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அறிக்கை தவறானது,” என்று கூறியுள்ளார்.

