பட்ஜெட்டுக்குப் பின் மகளிர் உரிமைத்தொகை உயரும்: சட்ட அமைச்சர்

பட்ஜெட்டுக்குப் பின் மகளிர் உரிமைத்தொகை உயரும்: சட்ட அமைச்சர்

2 mins read
3edf64d2-42ef-4f80-8f36-8b5fb78ea963
நிர்மல் குமார். - கோப்புப் படம்: நியூஸ் 18

சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்படும் எனத் தமிழக சட்ட அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நிதி ஆதாரங்களைச் சீரமைக்க வேண்டியுள்ளது என்றார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தவெக ஆட்சி அமைந்தால், அந்தத் தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 40, 50 ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தை ஆட்சியாளர்கள் விரும்பம்போல் மாற்றி அமைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நிர்மல் குமார், அனைத்தையும் ஒரே நாளில் சரிசெய்ய முடியாது என்றார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகுதான் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றும் முதலில் நிதி ஆதாரங்களைச் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“முதல்வர் விஜய் ஒவ்வொரு நிமிடமும் எதை நினைத்துச் செயல்படுகிறாரோ, அதை கவனத்தில் கொண்டு அனைத்து அமைச்சர்களும் செயல்படுகிறோம். மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

“அடுத்த மூன்று மாதங்களில் எல்லாம் சீராகும். ஒவ்வொரு துறையாக முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்,” என்றார் அமைச்சர் நிர்மல் குமார்.

முதல்வர் விஜய் எப்போது செய்தியாளர்களைச் சந்திப்பார் என்ற கேள்விக்கு, தேவையான நேரத்தில் சந்திப்பார் என்றும் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்றும் திரு நிர்மல் குமார் தெரிவித்தார்.

“குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

“சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகள், டாஸ்மாக் மதுக்கடைகளை ஆய்வு செய்து, தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

“தவெக ஆட்சியில் அதிகாரிகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது,” என்று நிர்மல் குமார் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்