பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

கோப்புப்படம்: ஊடகம்

31 Aug 2024 - 8:07 pm

2 mins read

சென்னை: பெண்களின் திருமண வயது 21 என்ற இமாலயப் பிரதேச அரசின் சட்டம் புரட்சிகரமானது: நிலுவையில் உள்ள சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வழிவகை செய்யும் சட்டம் இமாச்சலாப் பிரதேச சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது பெண்களின் கல்வி மற்றும் சுயமுன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் புரட்சிகரமான சட்டமாகும்.

தேசிய அளவில் இத்தகைய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசே இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கர்நாடக மாநில உயர்நீதிமன்றம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல உயர் நீதிமன்றங்களும் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றன.

அந்தக் கோரிக்கை பத்தாண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருந்த நேரத்தில் இமாச்சலப் பிரதேச அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்தி சட்டம் இயற்றியிருப்பது உண்மையாகவே பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழ்நாடு அரசும் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டத்தை தமிழக சட்ட மன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்