ஒவ்வொரு தேர்தலிலும் வினோத நிகழ்வுகள் வரிசைகட்டி நிற்கும். இந்தத் தேர்தலிலும் அத்தகைய வியப்புக்குரிய சம்பவங்கள் உள்ளன. அவற்றில் சில இதுவரை எந்தத் தேர்தலும் காணாத அதிசயங்கள்.
[ο] முதுபெரும் அரசியல் தலைவரான கே.ஏ.செங்கோட்டையன், குழந்தைகளுக்குச் சளி பிடித்தால் விசில் (தவெக சின்னம்) அடியுங்கள், சரியாகிவிடும் என்று கூறி பிரசாரம் செய்தார்.
[ο] திருத்தணி வேட்பாளரான சத்திய குமார், கட்சியினர் துணையின்றித் தன்னந்தனியாக வாக்கு சேகரித்து வருகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் ‘2,034’ தொகுதிகளிலும் தவெக வெற்றிபெறும் என்று கூறியது வேடிக்கை பிரசாரமாக சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
[ο] திருச்சி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றின் எல்இடி திரையில் ஊர்களின் பெயர்களுக்குப் பதிலாக, தமிழக வெற்றிக் கழகம் என்ற ஆங்கில எழுத்து காட்டப்பட்டதும் ஓர் அதிசயமே.
[ο] அதிமுக கடந்த 35 ஆண்டுகளில் பிராமண வேட்பாளரை நிறுத்தாத தேர்தல் களமாக இது உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2021 தேர்தலில்கூட ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நடராஜ் என்னும் பிராமணருக்கு அதிமுக வாய்ப்பளித்தது. அதிமுக தோழமைக் கட்சியான பாஜகவின் 27 வேட்பாளர்களிலும் ஒருவர்கூட பிராமணர் இல்லை. ஆயினும், தவெகவும் நாதகவும் அந்தக் குறையைப் போக்கிவிட்டன. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் பிராமணர்களின் விகிதம் 3 விழுக்காடு.
[ο] அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட விருப்பமனுக் கட்டணமாக ரூ.10,000, ரூ.20,000 என்று வாங்கிய நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மட்டும் ரூ.50,000 வசூலித்தது. அந்தக் கட்டணத்தைச் செலுத்தி 60 பேர் மனு வாங்கினர். அந்தப் பணம் முழுவதும் கட்சி நிதியில் சேர்க்கப்பட்டுவிட்டது, திருப்பித் தரமுடியாது என்று கைவிரித்துவிட்டது மநீம.
[ο] அவிநாசி தொகுதியில் திமுக வேட்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக திமுக நிறுத்தி இருக்கும் கோகிலாமணிதான் குறைந்த வயது வேட்பாளர். மருத்துவரான அவரது வயது 26.
[ο] பாமக (ராமதாஸ்) இளைஞரணித் தலைவராக இருந்துவந்த ஜிகேஎம் தமிழ்குமரன், அண்மையில் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மார்ச் 28ஆம் தேதி டெல்லி சென்ற அவர், காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவர் உடனே பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். கட்சியில் சேர்ந்த ஐந்தாவது நாளில் ஒருவர் வேட்பாளராவது காங்கிரசில் அதிசயம். தமிழ்குமரனின் தந்தை ஜிகே மணி ஐந்து முறை வென்ற தொகுதி பென்னாகரம்.
[ο] ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள். லாட்டரிச் சீட்டு அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், லால்குடி அதிமுக வேட்பாளர். மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர். மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர்.
[ο] ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியிடும் தொகுதி ஆண்டிப்பட்டி. திமுக வேட்பாளராக மகாராஜனும் அதிமுக வேட்பாளராக அவரது தம்பி லோகிராஜனும் அங்கு களத்தில் உள்ளனர். - திருநா

