மாமல்லபுரம்: சென்னையின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில், மாமல்லபுரம் அருகே உள்ள பேரூரில் ரூ.5,814.57 கோடி மதிப்பீட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் மூன்றாவது ஆலையை அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆசிய கண்டத்திலேயே மிக பிரம்மாண்டமான ஆலையாக அது அமையவுள்ளது.
சென்னை பெருநகரக் குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் சார்பில், கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட பேரூரில் 85.51 ஏக்கர் பரப்பளவில் இந்த பிரம்மாண்ட ஆலை நிறுவப்பட்டு வருகிறது.
ஜப்பான் பன்னாட்டு முகமையின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இந்த ஆலை, நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைச் சுத்திகரித்து குடிநீராக மாற்றும் திறன் கொண்டது.
முன்னதாக, சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரிலும் செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியிலும் தலா 100 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. அவை இரண்டும் தற்போது தலைநகரின் 30 விழுக்காட்டுக் குடிநீர்த் தேவையை நிறைவேற்றி வருகின்றன.
இந்நிலையில், சென்னை மக்களின் எதிர்கால குடிநீர்த் தேவையைக் கவனத்தில்கொண்டு, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரூரில் மூன்றாவது ஆலை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
தற்போது தனியார் நிறுவன ஊழியர்கள் இரவு பகலாக கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக் குடிநீர் வாரிய உயரதிகாரிகள் பணிகளைத் தொடர்ந்து ஆய்வுசெய்து, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
