மதுரை: மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான முதற்கட்ட பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என்று மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குநரான ஹனுமந்த் ராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது என்றும் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த பின்னர் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கை நேரிடையாக நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டபோதே முதற்கட்டமாக விடுதி, வகுப்பறை கட்டுமானப்பணிகள் 18 மாதங்களில் நிறைவுபெறும் எனத் தெரிவித்திருந்தோம்.
“தற்போது 150 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தயாராகி வருகிறது. மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், மகப்பேறு உள்பட அனைத்து நோய் சார்ந்த துறைகளும் அமைக்கப்படும்.
“இரண்டாம் கட்டத்தில் 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாறும்போது மதுரை அரசு மருத்துவமனையைப் போன்று சிறப்பு மருத்துவமனையாகச் செயல்படும்,” என்றார் அனுமந்த் ராவ்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளையும் 33 மாதங்களில் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 2,31,782 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 42 பிரிவுகளுடன் கூடிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுமானத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ஏறக்குறைய ரூ.2,000 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


