வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிவாரியாக அனுப்பும் பணி தொடக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிவாரியாக அனுப்பும் பணி தொடக்கம்

2 mins read
be9e7b8b-7a6c-4539-9692-1b78cc4c32e7
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை மாவட்ட சட்டமன்றத் தொகுதி வாரியாக காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பும் பணி நடைபெற்றது. - படம்: தினமணி

சென்னை: தமிழக சட்​டமன்றத் தேர்​தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொகுதிவாரியாக பிரித்தெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. வழக்கம்போல் இதற்காக கணினி மூலம் சிறப்புக் குலுக்கல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதியன்று 234 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காகப் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்காளர் தான் செலுத்​திய வாக்​கினை சரி​பார்க்​கும் கருவி​களும் அண்மையில் முதற்​கட்டமாகப் பரிசோதிக்கப்பட்டன.

அவை தற்போது மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின்கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த முறை 90,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பழுது இருப்பது தெரிய வந்தால் அவை உடனுக்குடன் மாற்றப்படும் என்றும் இதற்காக 20 விழுக்காடு இயந்திரங்கள் கூடுதலாக இருப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட அளவில் அங்​கீகரிக்​கப்​பட்ட கட்சிப் பிர​தி​நி​தி​கள், தேர்​தல் அதி​காரி​கள் முன்​னிலை​யில் இந்த இயந்​திரங்​களைப் பிரிக்கும் பணிக்காக மார்ச் 23ஆம் தேதி குலுக்​கல் நடத்தப்பட்டது.

பின்னர் அந்த இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் உள்ள வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதையடுத்து, அந்த இயந்திரங்களைத் தொகுதிவாரியாக அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தொடங்கியது.

குலுக்கல் முடிவின்படி, இந்த இயந்திரங்கள் அனுபப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மாவட்டத் தேர்தல் அதிகாரி குமரகுருவரன் தலைமையில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்டத் தேர்தல் அதிகாரி பயிற்சி அளிக்கும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை ரூ.273 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்