மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் 2 டன் எடையுள்ள (2,000 கிலோ) 1,000 ஓடுகளை பத்து நிமிடங்களில் உடைத்து குங்பூ தற்காப்புக் கலை வீரர் ஒருவர் உலகச் சாதனை படைத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம், 47. இவர், கடந்த 20 ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக குங்பூ பயிற்சிகளை அளித்து வருகிறார்.
‘பிளாக் பெல்ட்’ பெற்றுள்ள இவர், பெண்கள், இளையோர், சிறுவர், சிறுமியருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில், நோவா உலகச் சாதனைக்காக 1,000 மண் ஓடுகளைத் தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கியுள்ளார்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 10 வரிசைகளில் 10 ஓடுகள் வீதம் 1,000 ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
10 நிமிடங்களில் அனைத்து ஓடுகளையும் உடைத்து நோவா உலகச் சாதனை வீரர்கள் பட்டியலில் பஞ்சாட்சரம் இடம்பிடித்துள்ளார்.

