பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய 2ஆம் உலகப் போர் பீரங்கிக் குண்டு

பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய 2ஆம் உலகப் போர் பீரங்கிக் குண்டு

1 mins read
45c4e627-8004-40c4-ba41-273189ef1ae7
ஓரடி உயரமும் 10 கிலோ எடையும் கொண்ட இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிக் குண்டு. - படம்: இந்து தமிழ் திசை

பொன்னேரி: பழவேற்காடு அருகே கடலில் மீனவர் வலையில் 2ஆம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பீரங்கிக் குண்டு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவபிரகாஷ் (35) என்பவர், சக மீனவர்களுடன் வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர்களது வலையில், ஓரடி உயரமும் 10 கிலோ எடையும் கொண்ட துருப்பிடித்த இரும்பு உருளை சிக்கியது.

அதிர்ச்சியடைந்த மீனவர்கள், திருப்பாலைவனம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, அந்த மர்மப் பொருளுடன் கடற்கரைக்குத் திரும்பினர்.

விரைந்து வந்த காவலர்கள் அதை மீட்டனர். ஆவடி வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், அது சாதாரண இரும்புப் பொருள் அல்ல என்பதும் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிக் குண்டு என்பதும் உறுதியானது.

நீண்ட நாள்களாக கடலுக்குள் கிடந்ததால் அது முற்றிலும் துருப்பிடித்துப் போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்க திருப்பாலைவனம் பகுதியில் திறந்தவெளியில் பள்ளம் தோண்டப்பட்டு, அக்குண்டு பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்ற அனுமதி பெற்றவுடன், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் பீரங்கிக் குண்டு விரைவில் செயலிழக்கச் செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்