நடப்பாண்டில் டெங்கிக் காய்ச்சலால் 9,250 பேர் பாதிப்பு; மூவர் உயிரிழப்பு

நடப்பாண்டில் டெங்கிக் காய்ச்சலால் 9,250 பேர் பாதிப்பு; மூவர் உயிரிழப்பு

2 mins read
20848d03-fbe2-41fe-86d4-235b4e4d241a
மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு, பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: விகடன்

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டு டெங்கிக் காய்ச்சலால் 9,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர்.

டெங்கிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை இந்தியா அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக ‘ஏடிஸ்’ வகைக் கொசுக்கள் பெருக்கம் அடைந்து காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோவை, திருப்பூர், சேலம், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது கோவையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 912ல் இருந்து 1,215ஆக அதிகரித்துள்ளது.

இதே எண்ணிக்கை திருச்சியில் 174ல் இருந்து 329ஆகவும் சேலத்தில் 103ல் இருந்து 163ஆகவும் உள்ளது.

இதே காலக்கட்டத்தில் திருப்பூர் மாவட்டப் பாதிப்பில் பெரிய வித்தியாசமில்லை. கடந்தாண்டு 252 டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவான நிலையில், நடப்பாண்டு இதுவரை 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை பாதிப்பு குறைந்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2,154ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தற்போது 1,656ஆக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 23,387 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 10,611ஆகக் குறைந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நடப்பாண்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் 9,250ஆக குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு, பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், கொசு மருந்து தெளித்தல், விழிப்புணர்வுப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்