புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளை விட்டுவிட்டு பாஜகவினர் எதையோ சொல்லி திசை திருப்புவதாக திமுக எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
உண்மைகளை மறைத்து தகவல்களைக் கொடுப்பது என்ற உத்திகளை நாடாளுமன்ற பதில்களிலும் பாஜக அமைச்சர்கள் கடைப்பிடிக்கின்றனர் என்றும் இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றும் செயல்பாடு என்றும் அவர் தேசியக் கல்விக் கொள்கை குறித்து மக்களவையில் பேசும்போது குறிப்பிட்டார்.
“தேசிய கல்விக் கொள்கையை அமலாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் கையெழுத்திட மறுத்ததால் நிதியை நிறுத்தி இருக்கிறோம் என்பது குறித்த ஒரு வார்த்தைகூட அமைச்சரின் பதிலில் இல்லை. தாங்கள் செய்ததை வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியவில்லை. முழுப் பூசணிக்காய் சோற்றுக்குள் இருந்து சிரிக்கிறது.
“நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை தரும் கல்விக்கொள்கை என்று சொல்லிவிட்டு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைப்பது என்கிற முரண் எவ்வளவு மோசடித்தனமானது, குரூரமானது. மக்களை ஏமாற்றுவது,” என்றார் சு.வெங்கடேசன்.
“இந்தியைத் திணிக்கவில்லை என்று அமைச்சர் தரும் விளக்கம், இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பி்ட்ட அவர், இந்தித் திணிப்பை நியாயப்படுத்தி தினந்தோறும் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
முன்னதாக தேசிய கல்விக் கொள்கை குறித்து வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியைக் கொண்டு போய்ச் சேர்க்கும் இலக்கை இக்கொள்கை கொண்டிருப்பதாக மத்திய கல்வித் துணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதிலளித்திருந்தார்.

