சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தவெக தலைவர் விஜய் பங்கேற்ற அக்கட்சி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி நடந்தது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளி சுராஜ் திடீரென மயக்கம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ அவசர உதவி வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரது உயிர் வழியிலேயே பிரிந்தது.
இந்நிலையில், அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டிருந்த அவருடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இதுவரை யாரும் வந்து சுராஜின் குடும்பத்தைச் சந்திக்கவில்லை எனக் கூறினர்.
மேலும், சுராஜின் குடும்பத்திற்கு தவெக சார்பில் உதவி செய்ய வேண்டும் எனக் கூறிய அவர்கள் அதுவரை உடலைப் பெற மாட்டோம் எனத் தெரிவித்தனர்.

