கடன் வலையில் சிக்கும் இளைய தலைமுறை: 5 ஆண்டுகளில் 65% அதிகரிப்பு

கடன் வலையில் சிக்கும் இளைய தலைமுறை: 5 ஆண்டுகளில் 65% அதிகரிப்பு

படம்: தினத்தந்தி

23 Apr 2026 - 5:46 pm

2 mins read

சென்னை: இளம் தலைமுறையினர், சேமிப்புப் பழக்கத்தைவிடக் கடன் வாங்குவதையே தங்களது வாழ்க்கை பாணியாகப் பின்பற்றி வருவதாக அண்மைய ஆய்வு தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இளையர்களின் கடன் வாங்கும் விகிதம் 65 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று பிரபல கடன் மதிப்பீட்டு நிறுவனமான ‘சிஆர்ஐஎப்ஹை மார்க்’ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடன் வாங்குவோரில் 23 விழுக்காட்டினர், அதாவது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கினர் 30 வயதுக்குட்பட்ட இளையர்கள்.

கடந்த 2021ல் இருந்த இளம் கடனாளிகளின் எண்ணிக்கை, 2025ல் 6.6 கோடியாக உயர்ந்துள்ளது.

முன்னிலையில் இளையர்கள்

புதிய கடன்களைப் பெறுவதில் முதியவர்களைவிட இளையர்களே அதிகம். 2025ல் புதிதாகக் கடன் வாங்கியவர்களில் 53 விழுக்காட்டினர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

இளையர்கள் வாங்கும் கடன்களில் பெரும்பாலானவை எவ்வித அடைமானமும் இல்லாதவை.

நீண்ட காலச் சொத்தாகக் கருதப்படும் வீட்டுக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை இளையர்களிடையே 0.9 விழுக்காடாக பதிவாகியுள்ளது.

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், இளையர்களின் மொத்தக் கடன் மதிப்பு 102 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஓர் இளையரின் சராசரிக் கடன் தொகை ரூ.2.7 லட்சமாக உள்ளது.

கடன் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை அதனைத் திருப்பிச் செலுத்துவதில் இளையர்கள் காட்டவில்லை என ஆய்வு கூறுகிறது. 31 முதல் 90 நாள்களுக்குள் தவணை செலுத்தத் தவறுபவர்களின் விகிதம் இளையர்களிடையே 2.7 விழுக்காடு. இது மூத்த கடனாளிகளுடன் ஒப்பிடும்போது 2.2 விழுக்காடு அதிகமாகும்.

சிறிய அளவிலான கடன்களைத் திரும்பத் திரும்ப வாங்கும் பழக்கம் இளையர்களிடம் அதிகரித்துள்ளது. அதேவேளையில், வருமானம் இல்லாததால் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மூத்த தலைமுறையினரைவிட இளைஞர்களே அதிகச் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இது நீண்டகால நிதி ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
நிறுவனம்கடன்வேகம்இளையர்பணம்