திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு எதிரே 19 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், தப்பியோடிய கும்பலைத் தேடி வருகின்றனர்.
நெல்லை டவுன் சுந்தரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் வெள்ளிக்கிழமை (செம்டம்பர் 5) தமது நண்பர்களுடன் அங்குள்ள டீக்கடைக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த சிலருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, கும்பலைச் சேர்ந்தவர்கள் அரிவாளால் வெங்கடேஷை ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், கொலையான வெங்கடேஷ் உடன் வந்த நண்பர்கள் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சக்தி என்ற நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான வழக்கு வெங்கடேஷ் மீது இருப்பது தெரிய வந்துள்ளது.

