சென்னை: மாணவியை ஓடும் ரயில் முன்பாகத் தள்ளிவிட்டு கொலை செய்த இளையருக்கு மரண தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், அந்த இளையருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தில் இருந்து ரூ.25,000 ரூபாயை உயிரிழந்த மாணவியின் இரு தங்கைகளுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னையைச் சேர்ந்த மாணிக்கம், தலைமைக்காவலர் ராமலட்சுமி தம்பதியரின் மூத்த மகள் சத்யபிரியா தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு மேற்கொண்டிருந்தார்.
அவருக்கும் பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த முன்னாள் உதவி ஆய்வாளர் ஒருவரின் மகனான சதீஷுக்கும் காதல் மலர்ந்தது.
சதீஷ் எந்த வேலைக்கும் போகாமல் பொறுப்பின்றி இருப்பதாக சத்ய பிரியாவின் பெற்றோர் கூறியதையடுத்து காதலரைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார் சத்யபிரியா. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் வந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்தார் சத்யபிரியா. அப்போது அங்கு வந்த சசீஷ், தம்மைக் காதலிக்குமாறு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட, சத்யபிரியா அதற்கு மறுக்க, வாக்குவாதம் வலுத்தது.
கடும் ஆவேசம் அடைந்த சதீஷ், எதிர்பாராத விதமாக நடைமேடையில் இருந்த சத்யபிரியாவை, வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன்பாக தள்ளிவிட்டுள்ளார்.
இந்த சோகத்தில் சத்யபிரியாவின் தந்தை உயிரை மாய்த்துகொண்ட நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் ராமலட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் பெற்றோரையும் அக்காவையும் இழந்த சத்யபிரியாவின் தங்கைகள் தங்களுடைய மாமாவின் பராமரிப்பில் உள்ளனர். இந்த வழக்கில் தற்போது நீதிபதி ஸ்ரீதேவி, சதீஷுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.
மேலும், குடும்பத்தை இழந்து தவிக்கும் சத்யபிரியாவின் பிற தங்கைகளுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

