சென்னை: கம்போடியா, வியட்னாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக தமிழக காவல்துறை முன்னாள் தலைவர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், இணையக் குற்றங்களில் ஈடுபடுத்தவே பல இளையர்களை மோசடிக்காரர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக அவர் கூறியுள்ளார்.
கம்போடியா, லாவோஸ் நாடுகளில் பணிக்குச் சென்ற 1,185 இளையர்கள் குறித்து விவரங்கள் ஏதும் தெரியவில்லை என்றும் வேலை வாய்ப்புக்காகச் செல்லும் இளையர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு உடலில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது என்றும் சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
சென்னை, திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு வேலைக்காக பல இளையர்கள் சென்றுள்ளதாகவும் மோசடி வேலைக்காக அவர்களை அனுப்பி வைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.