கோவை: கோவை பேருந்து நிலையத்தில் நடனமாடி சமூக ஊடகத்தில் வெளியிட்ட யூடியூபருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் ஜித்து சாஜி ஒரு காணொளியை எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அதில், ஓர் இளைஞர் சேலை அணிந்து பேருந்து நிலையத்திற்குள் நடனமாடுவதும், இளையர் இருவர் பயணிகள் காத்திருப்பு பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் நடனமாடும் காட்சியும் இடம்பெற்று இருந்தது.
அந்தக் காணொளி தீயாகப் பரவியது. ஆனால் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி காணொளி எடுத்து பதிவிட்டதால் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபோன்ற செயல்களை ஏன் காவல்துறையினர் தடுக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்படுபவர்கள்மீது காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் காணொளியில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெண்கள் முகங்களை அவர்கள் அனுமதியின்றி காட்டி திருத்தம் செய்து பதிவேற்றி உள்ளனர் என்றும் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுபற்றித் தகவல் அறிந்த காட்டூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவம் பற்றி பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “பேருந்து நிலையத்தில் நடனமாடும் காணொளி கேரளத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.மோகன் என்பவரின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அவர்கள் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் நடனமாடி பொதுமக்களுக்குத் தொந்தரவு செய்துள்ளனர். அவர்களை விசாரிப்பதற்காக அழைப்பாணை அனுப்பியுள்ளோம்,” என்று கூறினார்.

