உபின் தீவில் தீயணைப்பு வீரரைக் காணவில்லை

உபின் தீவில் தீயணைப்பு வீரரைக் காணவில்லை

2 mins read
Google News Preferred Icon

தீயணைப்பு வீரர் ஒருவரை உபின் தீவில் வெள்ளிக்கிழமையிலிருந்து (ஏப்ரல் 14) காணவில்லை.

கெக்கெக் குவாரியிலிருந்து உதவி கோரி சனிக்கிழமை அதிகாலை 2.10 மணிக்கு தனக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தெம்பனிஸ் தீயணைப்பு நிலையத்தில் முழுநேர தேசிய சேவையாளரான அந்த ஆடவர் சேவையாற்றி வந்தார். குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் குவாரிக்கு வந்தபோது, காணாமல்போன அந்த ஆடவர் குறித்த அறிகுறி எதுவும் தென்படவில்லை.

அந்த தீயணைப்பு வீரர் காணாமல்போன சமயத்தில் அவர் பணியில் இல்லை.

காணாமல்போன அந்த ஆடவரின் நண்பர் ஒருவர், வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் குவாரியில் உதவி நாடியதை தாம் கண்டதாக உபின் தீவு குடியிருப்பாளரான திரு வாங், 65, சாவ்பாவ் சீன நாளிதழிடம் கூறினார்.

அங்குள்ள ஏரியில் அந்த ஆடவர் நீந்தச் சென்றிருக்கக் கூடும் என்று திரு வாங் சொன்னார். அந்த ஆடவர் தம்முடன் கைப்பேசியை எடுத்துச்செல்லவில்லை என்று அவருடைய குடும்பத்தாரும் நண்பர்களும் கூறினர்.

உபின் தீவில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மழை பெய்ததாக திரு வாங் குறிப்பிட்டார். அந்த ஏரியில் மலைப்பாம்புகளும் முதலைகளும் இருந்ததாகவும் அவர் சொன்னார். அந்த ஏரியின் ஆழம் 40 மீட்டர் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அந்த ஆடவரைத் தேடி மீட்கும் முயற்சிகளுக்கு காவல்துறை அதிகாரிகளும் உதவி வருகின்றனர்.

குடிமைத் தற்காப்புப் படை அந்த ஆடவரின் குடும்பத்தாருக்கு தேவையான உதவியை வழங்கி வருகிறது.

-