துவாஸ் சோதனைச்சாவடியில் கார் மோதி துணைக் காவல்படை அதிகாரி படுகாயம்

1 mins read
a607b85d-ce60-4a5d-a18e-650743e28902
காயமுற்ற அதிகாரியும் கார் ஓட்டுநரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

துவாஸ் சோதனைச்சாவடியில் கார் மோதி, துணைக் காவல்படை (Auxiliary police) அதிகாரி ஒருவர் தலையில் படுகாயம் அடைந்தார். இவ்விபத்து வியாழக்கிழமை இரவு நிகழ்ந்தது.

சிங்கப்பூர் பதிவெண் கொண்ட அந்த கார் மோதியதால் ஏற்பட்ட இவ்விபத்து குறித்து இரவு 12.55 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

வேகமாகச் சென்ற கார், கண்காணிப்புச் சாவடிக்கு வெளியே பணியிலிருந்த அந்த அதிகாரிமீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அந்தத் துணைக் காவல்படை அதிகாரியும் காரின் ஓட்டுநரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

காயமடைந்த அதிகாரியின் குடும்பத்தாருக்கு ஆதரவு வழங்க குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையமும் செர்ட்டிஸ் நிறுவனமும் அவர்களுடன் தொடர்பில் இருக்கின்றன.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.