முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் மரணம்

2 mins read
9bb949a1-7935-4bfc-9260-946ebe3b481c
-

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் நேற்று இரவு 9.48 மணிக்குக் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூரின் ஆறாவது அதிபரும் நீண்டகாலம் அந்தப் பதவியில் இருந்த வருமான திரு நாதனின் உயிர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் பிரிந்தது. 1999 முதல் 2011 வரை இரண்டு முறை சிங்கப்பூர் அதிபராக திரு நாதன் பதவி வகித்தார். திரு நாதனின் மரணம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் அலுவலக அறிக்கை பிரதமர் லீ சியன் லூங்கும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் அவரது மரணம் அறிந்து மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் மறைந்த அவரது குடும்பத்தாருக்கு தங்களது அனுதாபங் களைத் தெரிவிப்பதாகவும் கூறியது. கடந்த ஜூலை மாதம் 92 வயதை எட்டிய திரு நாதன், சென்ற மாதம் 31ஆம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.

சிங்கப்பூர் அதிபராகப் பதவி ஏற்கும் முன் திரு நாதன் பொதுச் சேவையில் 40 ஆண்டுகாலமாக தனிச்சிறப்புமிக்க வகையில் பணியாற்றினார். தொழிற் சங்கங்கள், பாதுகாப்பு, அரச தந்திரம் என பல்வேறு துறைகளில் அவர் பங்காற்றினார். 1962ஆம் ஆண்டில் திரு நாதன் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தொழிலாளர் ஆய்வுப் பிரிவில் பணியில் சேர்ந்தார். வேலைநிறுத்தங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைக் கையாண்டார்.

அந்தக் காலகட்டத்தில் தொழிற் சங்கங்களில் கம்யூனிச சார்பு சக்திகள் ஊடுருவி இருந்தன. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சிலும் திரு நாதன் 1961லிருந்து 1971 வரை, பின்னர் மீண்டும் 1979லிருந்து 1982 வரை என இரண்டு முறை முதன்மை நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றி னார். சிங்கப்பூரின் பாதுகாப்பு, உளவுத் துறைப் பிரிவின் தலைவராக 1971ல் இருந்து 1979 வரை இவர் பணியாற்றினார். அப்போது லாஜு என்ற பயணிகள் படகு கடத்தல்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், பிணை பிடித்து வைக்கப்பட்ட பயணிகளை விடுவிக்க தான் பிணையாளியாக விமானத்தில் குவைத் வரை கடத்தல் காரர்களுடன் சென்றார்.

பொதுச் சேவையில் இருந்து 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபின் திரு நாதன் ஊடக நிறுவனமான 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்' என்ற நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகச் செயல்பட்டார்.