எக்கச்சக்கமான ஆவணங்கள் பரிசீலனை, தொடர் மனுக்கள், கால அவகாச கோரிக்கைகள் என நீண்ட போராட்டத்துக்குப் பின், பல்வேறு கட்டங்களைத் தாண்டி தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அணிக்கு அதிமுகவின் கட்சிச் சின்னமான இரட்டை இலையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் நடை பெற்ற இரட்டை இலைச் சின்னம் தொடர்பான நீண்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வெளியானது. அமைப்பு ரீதியாகவும், அமைச் சரவையிலும் முதல்வர் பழனிசாமி அணிக்கே அதிக ஆதரவு இருப் பதால் சின்னத்தை அத்தரப்புக்கு வழங்கியதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. "பழனிசாமி அணிக்கு 111 தமிழக எம்எல்ஏக்கள், புதுச்சேரி யின் 4 அதிமுக எம்எல்ஏக்கள், 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 1,877 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவு உள்ளது. டிடிவி தினகரன் அணியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக் கள் உட்பட 20 பேர், 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது," என்று ஆணையத்தின் அறிக்கை விளக்கியது.
இரட்டை இலை சின்னத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, முதல்வர் அணியினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். படம்: சதீஷ்

