பேருந்து, ரயில் கட்டணங்கள் 7% அதிகரிப்பு: வசதி குறைவான பயணிகளுக்குக் கூடுதல் ஆதரவு

இவ்வாண்டின் பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுத் திட்டத்திற்கு ஆதரவாக, பொதுப் போக்குவரத்து நிதியில் ஆறு மில்லியன் வெள்ளி பணம் போடுவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதால், குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கவிருக்கிறது. இந்தக் குடும்பங்களுக்குத் தலா $50 மதிப்புள்ள மொத்தம் 450,000 பற்றுச்சீட்டுகள் கிடைக்கும். சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட தலா $30 மதிப்புள்ள 300,000 பற்றுச்சீட்டுகளைவிட இது அதிகம். 

அதோடு, பற்றுச்சீட்டுக்குத் தகுதி பெறுவதற்கான விதிமுறைகள் திருத்தப்பட்டிருப்பதால், ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பம் பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறும். முன்பு, பத்தில் ஒரு குடும்பமே தகுதிபெற்றது. 

பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வை வசதி குறைவான பயணிகள் சமாளிப்பதற்கு உதவுவது இதன் நோக்கம். 

“தேவைப்படும் பயணிகளுக்குப் போதிய உதவி கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும்,” என்று போக்குவரத்து அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. 

குறைந்த வருமானம் ஈட்டும் தகுதிபெறும் தொழிலாளர்களும் இயலாமைகள் உள்ளவர்களும் பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுகளுடன் நன்மை அடைவார்கள் என்றும் அமைச்சு தெரிவித்தது.  குடும்பத்தின் தனிநபர் சராசரி மாத வருமானம் 1,200 வெள்ளிக்கு மேற்போகாத குடும்பங்கள் பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறும். 

சென்ற ஆண்டு, 1,900 வெள்ளி அல்லது அதைவிடக் குறைவான மாத வருமானமுள்ள அல்லது 650 வெள்ளிக்கு மேற்போகாத தனிநபர் சராசரி வருமானமுள்ள குடும்பங்கள் மட்டுமே பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெற்றன.   சென்ற ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டின் பற்றுச்சீட்டுத் திட்டத்திற்கு இம்மாத இறுதி வரை விண்ணப்பிக்கலாம். 

ஐம்பது வெள்ளி பற்றுச்சீட்டுகள் வழங்கும் புதிய திட்டம் இவ்வாண்டு நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி முடிவடையும்.  பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெறுவோர் தங்களது சமூக நிலையத்தில் அல்லது மன்றத்தில் விண்ணப்பம் செய்யலாம்.  குறைந்த வருமானம் ஈட்டும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பொதுப் போக்குவரத்து கட்டணத் தள்ளுபடி 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது. 

இதன்வழி, கட்டண உயர்வுக்குப் பிறகும் இவர்களது சராசரி போக்குவரத்து கட்டணம் 2015ஆம் ஆண்டைவிடக் குறைவாக இருக்கும் என போக்குவரத்து அமைச்சு கூறியது.

 

Loading...
Load next