கணினிக் கோளாறு காரணமாக தரைவழி எல்லைகளில், விமான நிலையத்தில் நான்கு மணி நேரம் நீடித்த தாமதம் அகன்றது
சிங்கப்பூரின் தரைவழி, விமான நிலைய சோதனைச்சாவடிகளில் செயல்படும் குடிநுழைவு அனுமதி கணினி முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது.
அது பற்றி குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் ஃபேஸ்புக்கில் நேற்று முற்பகல் 11.28 மணிக்கு அறிவித்தது.
பயணிகளுக்கு ஏற்பட்டு இருக்கும் சங்கடத்திற்காக தான் வருந்துவதாகவும் நிலை மையைப் புரிந்துகொண்டு அவர்கள் பொறுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டது.
அது, பிறகு பிற்பகல் 3.58 மணிக்கு புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
அனைத்து சோதனைச் சாவடிகளிலும் குடிநுழைவு அனுமதி முறை வழக்க நிலைக்குத் திரும்பிவிட்டதாக ஆணையம் தெரிவித்தது.
கணினி ஏற்பாட்டில் ஏற்பட்ட கோளாறுக்கான மூலக் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க புலன்விசாரணை நடந்து வருவதாகவும் ஆணையம் கூறியது.
சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் தானியங்கி அனுமதி வாயில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டதை அடுத்து அங்கு இருந்த பயணிகள், ஊழியர்கள் நிர்வகிக்கும் முகப்புகளுக்குத் திருப்பிவிடப் பட்டதாக நேற்று பிற்பகல் 2.03 மணிக்கு ஆணையம் கூறியது.
உட்லண்ட்ஸ், துவாஸ் தரை வழி சோதனைச்சாவடிகளிலும் சில தானியங்கி அனுமதிவாயில் கள் பாதிக்கப்பட்டன. என்றாலும் அதனால் குடிநுழைவு அனுமதி கொடுப்பதில் பிரச்சினைகள் ஏற்படவில்லை என்றும் ஆணையம் மேலும் கூறியது.
சூழ்நிலையைச் சமாளித்து சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்த ஏதுவாக விடுப்பில் இருந்த அனைத்து ஊழியர்களும் பணிக்கு வரும்படி அழைக்கப்பட்டு இருந்ததாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
உதவிக்கு விரைந்த அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படி சோதனைச்சாவடிகளில் காத்திருந்த பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அனுமதி பெறுவதற்குக் கொஞ்சம் கூடுதல் நேரமாகும் என்பதும் அவர்களிடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தாமதம் ஏற்படும் என்றும் ஏதேனும் உதவி தேவை எனில் பயணிகள் அதிகாரிகளை அணுகலாம் என்றும் சாங்கி விமான நிலையம் நேற்று பிற்பகல் சுமார் 12.30 மணிக்கு டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தெரிவித்தது.
விமான நிலைய முனையங்களில் காத்திருந்த பயணிகளுக்கு விமான நிலையம் உதவியதாகவும் உடனே புறப்படவிருந்த விமானங்களில் பயணம் செய்யவிருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதாகவும் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இதற்கு முன்னதாக ஆணையம் ஓர் அறிவிப்பை விடுத்தது. அவசரமில்லாத அனைத்து பயணங்களையும் ஒத்திவைக்கும்படி பயணிகளுக்கு அது நேற்று பிற்பகல் 12.03 மணிக்கு ஆலோசனை கூறியது.
ஆணையத்தின் ஃபேஸ்புக்கில் உடனுக்குடன் தகவல்கள் இடம்பெறும் என்றும் அது குறிப்பிட்டு இருந்தது.
நண்பகலுக்கு முன்னதாக தரை வழி சோதனைச்சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் வர முயன்ற வாகன ஓட்டுநர்கள், தாங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்ததாக இணையத்தில் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மலேசியர்களுக்கான ஃபேஸ்புக் குழுமத்தில் பலரும் படங்களை வெளியிட்டு இருந்தனர். அந்தப் படங்கள், கடற்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்ததைக் காட்டின. குடிநுழைவுக் கூடத்தில் பயணிகள் காத்திருந்ததையும் அந்தப் படங்கள் காட்டின.
அதேபோல, சாங்கி விமான நிலையத்திலும் நீண்டவரிசை காணப்பட்டது.
நண்பகல் 12 மணிக்கு முனையம் 3ன் புறப்பாட்டுக்கூடத்தில் ஒவ்வொன்றும் சுமார் 50 மீட்டர் நீளத்துக்கு இரண்டு வரிசைகளில் பயணிகள் நின்றிருந்ததைக் காண முடிந்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
ஆனாலும் முனையம் 1, 2, 4ல் பயணிகள் வரிசை எதுவும் காணப்படவில்லை என்றும் அது குறிப்பிட்டது.