ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் சக மாணவரைக் கொன்றதாகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இளைஞர் தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் மாதம் அவர் உயர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க வழக்கறிஞர் ஷான் டே நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதியன்று கோடரி ஒன்றைப் பயன்படுத்தி பள்ளியில் உள்ள கழிவறையில் 13 வயது சக மாணவரை அந்த இளைஞர் வெட்டிக் கொன்றார்.
அந்த மாணவரின் கழுத்தை அவர் தொடர்ச்சியாகப் பலமுறை கோடரியால் வெட்டினார். அந்த மாணவருக்கு மரணம் விளைவிக்கும் எண்ணத்துடன் அவர் அவ்வாறு செய்ததாக முதலில் நம்பப்பட்டது. அந்தச் சம்பவத்துக்கு முன்பு இருவரும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.
சக மாணவரை அந்த இளைஞன் வெட்டிக் கொன்ற பிறகு மனநலக் கழகத்தில் அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்தப்பட்டது. சம்பவம் நிகழ்ந்ததிலிருந்து அந்த இளைஞன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனித்தேர்வராக அவர் 'ஓ' நிலைத் தேர்வை எழுதினார்.
சக மாணவரைக் கொன்றபோது அந்த இளைஞனுக்கு 16 வயது. இப்போது அவருக்கு 18 வயது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் சம்பவத்துக்கு முன்பு 2019ஆம் ஆண்டில் தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக இதற்கு முன்பு நடந்த வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவம் நிகழ்ந்தபோது அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. முதலில் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறைக்கப்பட்டுள்ளது. எவ்வித நோக்கமும் இல்லாமல் மரணம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
