மயாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 85 வயது மூதாட்டியை ஒரு முதலை நீருக்குள் இழுத்துச் சென்று கொன்றது தொடர்பான காணொளி வெளியாகியிருக்கிறது.
ஏரியோரமாகத் தன் நாயுடன் நடந்துகொண்டிருந்தார் திருவாட்டி குளோரியா செர்ஜ் எனும் அம்மூதாட்டி.
நீருக்குள் தொலைவில் இருந்தபடி சத்தமின்றி வந்த அந்த மூன்று மீட்டர் நீளமுள்ள முதலை, திடீரெனப் பாய்ந்து அந்நாயைக் கவ்விச் செல்ல முயன்றது.
ஆனால், 'ட்ரூப்பர்' என்ற அந்த நாய் தப்பித்துவிட, திருவாட்டி குளோரியா அம்முதலையின் பிடியில் சிக்கிக்கொண்டார்.
அப்பகுதியிலிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் இச்சம்பவம் பதிவானது.
தம் அண்டைவீட்டுக்காரரை முதலை இழுத்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருவாட்டி கேரல் தாமஸ் என்பவர், உடனடியாக 911 எண்ணை அழைத்து உதவி கோரினார்.
"நீர்ப்பரப்பிற்கு மேலே அவர் தலை தெரிந்ததும், அருகிலிருந்த துடுப்புப் படகை நோக்கி நீந்தும்படி அவரிடம் கூறினேன். ஆனால், அவர், ' என்னால் முடியாது, முதலை என்னைப் பிடித்திருக்கிறது' என்று சொன்னார்," என்று திருவாட்டி கேரல், உள்ளூர்த் தொலைக்காட்சி ஒளிவழியிடம் விவரித்தார்.
அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தபின், ஒரு கழியை எடுத்துகொண்டு அவர் திருவாட்டி குளோரியாவிற்கு உதவ விரைந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. அவரால் நீருக்குள் செல்லவும் இயலவில்லை.
இச்சம்பவத்தில் நாய் உயிர்தப்பியபோதும் திருவாட்டி குளோரியா மாண்டுபோனார். பின்னர், 270 கிலோ முதல் 320 கிலோவரை எடைகொண்ட அம்முதலை பிடிக்கப்பட்டு, வலியின்றிக் கொலை செய்யப்பட்டது.
ஃபுளோரிடாவில் மொத்தம் 1.3 மில்லியன் முதலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 1948ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை அங்கு முதலையால் 26 பேர் உயிரிழந்துவிட்டனர்.