அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு 18 வயது இளைஞன் பத்து பேரைச் சுட்டுக்கொன்றான். துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் சமூகத் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பும் செய்துள்ளான்.
துப்பாக்கிச் சூட்டை இனவெறியால் தூண்டப்பட்ட குற்றமாக காவல் துறை வகைப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 10 பேர் மாண்டதோடு, மூன்று பேர் காயமடைந்தனர். இவர்களில் 11 பேர் ஆஃப்பிரிக்க அமெரிக்கர்கள்.
டாப்ஸ் எனும் பேரங்காடிக்குள் துப்பாக்கிக்காரன் நுழைவதற்கு முன், அதன் வாகனம் நிறுத்துமிடத்தில் நான்கு நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். எஞ்சியவர்கள் பேரங்காடிக்குள் தாக்கப்பட்டனர். துப்பாக்கிக்காரன் கவச உடை அணிந்திருந்ததாகக் கூறப்பட்டது.
காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றடைந்போது, துப்பாக்கிக்காரன் தமது கழுத்தில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாகக் கூறப்பட்டது. அவனை அமைதிப்படுத்திய பிறகே, அவன் காவல் துறையிடம் சரணடைந்தான்.
டுவீட்ச் எனும் சமூகத் தளத்தில் துப்பாக்கிச் சூடு நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாக அந்நிறுவனம் உறுதிபடுத்தியது. ஆனால் அந்தக் காணொளி இரண்டு நிமிடங்களுக்குள் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. துப்பாக்கிகளை விற்பதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரும்படி எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

