தேர்வெழுதிய அரை மில்லியன் மாணவர்கள்.
நிசப்தம் வேண்டும் என்பதற்காக ஆகாயவெளியை மூடி எல்லா விமானப் பயணங்களையும் நிறுத்திய அரசாங்கம்.
தேர்வுக்குத் தாமதமாகச் சென்ற மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையத் துணையாகச் சென்ற காவல் துறை.
தேர்வெழுதும் பிள்ளைகளை தேர்வு நிலையங்களில் விட்டுவிட்டு நேராக கோவிலுக்குப் படையெடுத்த கவலையுள்ள பெற்றோர். இவை எல்லாம் நடந்தது தென்கொரியாவில்.
பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி நுழைவுத் தேர்வுக்காகத்தான் நாடே அல்லோலகல்லோப்பட்டது.
ஒன்பது மணி நேரத் தேர்வை, இவ்வாண்டு 508,030 மாணவர்கள் எழுதினர்.
சுனுவெங் என்று அழைக்கப்படும் அந்தத் தேர்வு ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகிறது. அதில் சிறப்பான மதிப்பெண் கிடைத்தால்தான் சிறந்தப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.
அது மட்டுமில்லாமல், நல்ல வேலை, நல்ல வாழ்க்கைத் துணை என தென்கொரியாவில் வாழ்வில் எல்லாமே கைகூடுவதற்கான திறவுகோலாக இந்தத் தேர்வு கருதப்படுகிறது.
கடும் போட்டி நிலவும் தென் கொரியாவின் கல்விமுறைக்கும் அதனால் மாணவர்கள் எதிர்நோக்கும் பெரும் அழுத்தத்துக்கும் இத்தேர்வு ஓர் எடுத்துக்காட்டு.
மனஅழுத்தம் உள்ள இளையர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று. தற்கொலை செய்துகொள்ளும் இளையர்களின் விகிதமும் அங்கு மிக அதிகம். அந்நாட்டின் கல்விமுறை இப்போக்குக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

